Wednesday, December 28, 2011

leadership

தகுதியற்றோர் கரங்கள்
தலைமை ஏற்பதை
தவிர்க்க முடியாத
தன்மை இறுதி
தருணத்தின் அடையாளம்.

தலைமை ஏற்கும்
தகுதியற்றோரை
தடுக்க முடியாவிடினும்
தகுதியற்றோர் தத்தமது
தகைமைக்கு ஏற்ப
தங்கள் தகுதிகளை
தேற்றிக் கொள்ளலாம்.

பொறுப்புக்கள் எமக்கு
அமானிதங்கள்
தகுதி இருப்பின்
விரும்பி ஏற்போம்
தகுதி இல்லாவிடின்
வெறுத்து ஒதுக்குவோம்.

மாற்றங்களை விரும்புவோம்
மாற்றங்களை ஏற்போம்
மாற்றங்களை செய்வோம்
மாற்றம் என்பதே
உலகில் மாறாத ஒன்று.

எந்த ஒரு சமூகம்
தம்மை மாற்றிக் கொள்ள
முனையாத வரை
இறைவன் அந்த
சமூகத்தில்
மாற்றத்தினை ஏற்படுத்த மாட்டான்.

pmgg

ஊருக்கு நல்லாட்சியாய்
உதித்து
வெறும் சொல்லாட்சியாய்
மாறிய கற்றோரே!

பலர் கொண்ட ஷூரா
சபை அமைத்து
சிலர் கொண்ட தனிக்குழுவில்
முடிவெடுக்கும்
மண்ணின் மைந்தர்களே!

ஒரு தனி மனிதனை
கவிழ்க்க வேண்டிய
குரோதத்தில் ஊருக்கு
நன்மை பயப்பதாய்
வேடமிடும் வள்ளல்களே!

மேடைகள் அமைத்து
வேடங்கள் போட்டு
நாடகங்கள் நடித்தது
போதும் மக்களுக்கு.

சாதனைகள் சொல்வோம்
விமர்சனங்கள் வெறுப்போம் என
விமரிசையாக கூறிவிட்டு
விமர்சனத்தினையே தம்
முழுநேர சேவையாக
செய்பவர்களே!

சொல்லை விட்டு
செயலில் இறங்குங்கள்.
26 ம் திகதி மகிந்தவின்
காத்தான்குடி வருகையினை
பயன்படுத்துங்கள்.

1) ஊர் எல்லை
2) எம்மவரின் காணிகள்
3) குப்பை கொட்டுமிடம்
4) மடுவம்
5) அதிகரித்துவரும் சனத்தொகைக்கு
ஏற்ற உட்கட்டமைப்பு வசதிகள்
6) மையவாடிகாணிகள்
7) மாநகரசபையாக தரம் உயர்த்துதல்
8) தனியான கல்விவலயம்
9) உடைக்கப்பட்ட புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாயலின் கதி
10) 1000 பாடசாலைகள்
அபிவிருத்தியில் இணைக்கப்படாத எமது பாடசாலைகள்
என எவ்வளவோ விடயங்கள் உள்ளன
நீங்கள் மாண்பு மிகு ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பதற்கு.

படித்தவர்கள்
நாகரீகமானவர்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கும்
அணுகும் முறைகள்.

வாய்ப்பினை பயன்படுத்தாமல்
மற்றவர்களை குறை கூறி பலனேதுமில்லை.

life

வெந்ததை தின்று
வந்ததை பேசி- பிறர்
நொந்து போக
வாழ்வதா வாழ்க்கை?

கற்றதை கொண்டு
நெஞ்சங்களை வென்று- பிறர்
போற்றி புகழ
வாழ்வதல்லவா வாழ்க்கை!

the journey for middle east

தொலைபேசியில்
எரிந்து விழும்,
என் நண்பர்களே!
கர்ப்ப அறையில்- உங்கள்
தாய் உணர்ந்த ஓர்
உதையின் வலிக்கு
ஈடாகுமா நீங்கள்
கடல் கடந்து படும்
வேதனைகள்!

பாடு பட்டுழைக்கும் பணத்தை
களியாட்டங்களிற்கும்,
காதலியின்
தொலைபேசி, இணைய
கட்டணங்களிற்கும்
செழுத்துபவர்களிற்கு
எங்கே
புரியப்போகின்றது?
உங்கள் பணத்திற்கான
காத்திருப்புக்களும்,
கண்ணீர்களும்.

அதரங்கள் அழிய
உதிரங்கள் உறைந்து
கட்டிளமை கரைந்து
பார்வைகள் பறிபோக
அரபுலகில் அல்லல்படும்
அன்பு தியாகிகளே!

சென்ற நோக்கம்
மறந்து விடாமல்
வரைந்த வைராக்கியங்கள்
அழிந்து விடாமல்
வாழ்க்கையையும்
மானத்தையும்
பாதுகாப்பது உங்கள்
பொறுப்பு.

உங்கள் தியாகத்திற்கு
இறைவனால் மாத்திரமே
பரிசளிக்க முடியும்.

the journey for europe

மேற்குலகில்
குடும்ப சுமை
குறைக்க தம்
இளமையினை
பெட்றோல்
பங்குகளில்
இழந்து
உதிரம் சிந்தி
உழைக்கும்
பாசம் கொண்ட
எம் ஊர்
நண்பர்கள்
மனிதருள்
மாணிக்கங்கள்.

அவர்களை தவிர்த்து,

மேற்குலகில்
மோகத்தில்
மதி
மயங்கி- பிறந்த
மண் வெறுக்கும்
மனிதர்களே!

பணம் மீது
பற்றுக்கொண்டு
பெண் மீது
பித்து பிடித்து
பெற்றோர்கு ஆற்றும்
பணி துறந்து
படைத்தோனிற்கு
பணிவு அற்று
பகட்டுடன் வாழ
பிறந்த பூமி விட்டு
பறக்க துடிக்கும்
பருவ வயதினரே!

புலியின் வாலாய்
இருப்பதை விட
எலியின் தலையாய்
இருப்பது சிறந்தது.

உணவை அளிப்பவன்
இறைவன்.
ஊரில் பெற்றோர்,
உறவினருடன்
வாழ்வதிலும்
இன்பம் உண்டு.

சொந்த
ஊரை நேசிப்போம்
சொந்த
ஊரில் வாழ்வோம்
சொந்த
ஊரை வளப்படுத்துவோம்.

important

நள்ளிரவு
கடந்தும்
கைத்தொலைபேசியில்
காதலியுடன்
சலிக்காமல்
உரையாடுகின்ற
எமது
இளைஞர்களிற்கு
தன்னை பெற்ற
தாயிடம் பேச
ஒரு நிமிடம்
ஒதுக்க
முடியாமைக்கான
நியாயம் என்ன?

பதில்
எதிர்பார்ப்பில்...

rain enjoyment

சிந்துகின்ற
மழைத்துளிகள்
சிலிர்க்க வைக்கும்
குளிர்காற்று
ஜன்னலோர
தூவானம்
குளிக்க விரும்பும்
பெருமழை
தாளமிடும்
இடிகள்
ஓளிக்கோலமிடும்
மின்னல்கள்
கப்பல் விடும்
வீட்டு முற்ற வெள்ளம்
கால் நனைக்க
வீதி வெள்ளம்
வெள்ளத்தினூடு செல்லும்
பாதணிக்கான
போராட்டம் என
சிறகடிக்கும் எமது
சிறுவயது
ஆனந்தங்கள்.

இக்கால சிறுவர்களின்
கனவிலும் நினைவில்
வர முடியாத
இயற்கையுடன்
இணைந்த
இன்பங்கள்.

அன்று
மழைக்காலம்
ரசிக்க வைக்கும்
ரசனைகள்

இன்று
மழைக்காலம்
டெங்கு என
துடிக்க வைக்கும்
வேதனைகள்.

மழையினை ரசிப்போம்
டெங்கினை ஒழிப்போம்.

varumai

மீன்களும் அழுகின்றன

அணிவதற்கு ஆடை அற்று
உண்பதற்கு உணவு
அற்று
வாழ்வதற்கும் வழி
அற்று
தம் திரை கொண்டு
மானத்தை மட்டுமல்ல
வறுமையை கூட
பிறருக்கு மறைத்து
இறைவனிடம் மட்டும்
இரந்து வாழும்
பொறுமையின் சிகரமாம்
எம் சகோதரிகளின்
பரிதாப நிலை கண்டு,
வீட்டினுள் அழையா
விருந்தாளியாய்
நுழைந்து வெளியேற
மறுத்து கொடுங்கோல்
ஆட்சி புரியும்
வெ
ள்ளத்தின்
குடிமக்களாம்
மீன்களும் அழுகின்றன

மழைத்துளிகளுடன்
கலந்து விடும்
எமது மாந்தரின்
கண்ணீருக்கு
பதில் இவ்வுலகில்
இல்லாவிடினும்
மறுமையில்
எம் சமூக தலைமை
மாத்திரம் அல்ல
நாங்களும்
சொல்ல தயாராகுவோமா?

rain

தண்ணீரில்
தத்தளிக்கும்
உடன் பிறவா
சகோதரர்களுக்கு
விமோசனம்
கிடைக்காவிடினும்
விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும்.

எரியும் வீட்டில்
பிடுங்கும் வரைக்கும்
இலாபம்
மூழ்கும் வீட்டில்
பிடிக்கும் வரைக்கும்
மீன்கள்.

மக்களே!
எச்சரிக்கை.
வெள்ளத்தினூடாக
மனிதனையே
முழுங்கும்
மனித சுறாக்கள்
வருமாம்
கவனம்.

purithal

புரிந்து கொள்வதற்கான
முயற்சிகளும்
தவிப்புகளுமே
வளரும் அன்பின்
விதைகளும்
உரங்களும்.

பூரண புரிதல்
இவ்வுலகில்
அசாத்தியம்.

புரிதலின் முயற்சி
கைவிடப்படும்
அடுத்த கணமே
வெறுப்பினை
நோக்கிய
பாதைகள்
திறக்கப்படுகின்றன.

பிறரினை புரிய
முயற்சிப்போம்.
எம்மை
மீளாய்வு செய்வோம்

Wednesday, December 7, 2011

குப்பையும் மடுவமும்

குப்பையும் மடுவமும்

காத்தநகரின் கீர்த்தியை
கடல் கடந்து ஏலமிட்டும்
தேர்தல்கள் பல வென்றும்
தீராத மாயமும்
நாள் ஓரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
கூடி வரும் கட்டணங்களும்
மடுவ மூடுவிழா நெருங்கியும்
கவனிப்பாரற்று இருக்கும்
தலைமைத்துவங்களும்
ஊரை அழகுபடுத்தும்
முனைப்பில் தவிர்க்கும்
மண்ணின் மைந்தனும்
மௌனம் காக்கும்
சம்மேளனமும்
உணர்த்தும் உண்மைகள் என்ன?

கடந்தது கடக்கட்டும்
நடப்பது நடக்கட்டும்
நாமும் எம் வாழ்வும் என
வாழும் எம் ஊர்
பெரியோர்களே!
பிணி தீர பணி
நல்க மாட்டீரா?

சடவுலக
சாத்தானின் வலையில்
சிக்குண்டு சிந்தனை தொலைத்த
எம் அருமை இளைஞர்களே!
அவலம் போக்க
கவலைப்பட மாட்டீர்களா?

அடிப்படைத் தேவைகளை மறுத்து
ஊரை அழகுபடுத்தி
உலகை ஏமாற்றும்
கயவர்களின் முகத்திரை
கிழிப்போம்.

மகிந்த தேரரின் வருகை
இந்து சமுத்திரத்தின்
முத்தை மாசகற்றியதாம்
மகிந்த ராஜபக்சவின்
வருகை கிழக்கிலங்கையின்
முத்தை மாசகற்ற வழி வகுப்போம்.

எங்கள் தேவைகளை
சாத்வீதமாக உலகுக்கு
எடுத்துரைப்போம்.

மகிந்தவின் வருகையினை
பயன்படுத்துவோம்.
ஊரின் களை அகற்றுவோம்.

26-12-2011 சுனாமி
நினைவுநாளில்
ஊரின் எம் நிம்மதியான
வாழ்விற்கு அடித்தளம் இடுவோம்.